Searching...
Tuesday, July 1, 2014

Google Play Download Warnings - கூகுள் பிளே டவுண்லோட் எச்சரிக்கை

தன் வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை வழங்க கூகுள் நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோர் அமைத்து, அதில் ஏறத்தாழ ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்களைக் கொண்டுள்ளது. (ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஸ்டோர் போல இது அமைக்கப்பட்டுள்ளது.) இவற்றில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியவை. உலகெங்கும், மொபைல் போன்களில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சென்ற பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், உலகெங்கும் விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்களில், 50 சதவீதத்திற்கும் அதிகமானவை, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தையே இயக்குகின்றன. இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் அதிக அளவில் டவுண்லோட் செய்யப்பட்டுப்
பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதில் சில அப்ளிகேஷன்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளதாக, ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்கும் செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்ற ஏழு மாதங்களில், ஏறத்தாழ 1,200 அப்ளிகேஷன்கள் இது போல உள்ளதனை இந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. எனவே, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்திடும் முன் சற்று கவனத்துடன் அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது. செமாண்டெக் அடையாளம் கண்ட பல அப்ளிகேஷன்கள், வயது வந்தோருக்கானது. இந்த அப்ளிகேஷன்கள், பயனாளர்களை சில இணைய தளங்களுக்கு அழைத்துச் சென்று, மால்வேர் புரோகிராம்களை இயக்குகின்றன. இவற்றைப் பயன்படுத்துவோரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகின்றன. 
இந்த புரோகிராம்களில் பல கூகுள் பிளே ஸ்டோரில் வெகு நாட்கள் வைத்திருக்கப் படுவதில்லை. புரோகிராம்களை பதிந்து வைத்தவர்களே, அவற்றை எடுத்துவிடுகின்றனர். அவற்றின் இடத்தில் புதிய மால்வேர் கலந்த புரோகிராம்களைப் பதித்துவிடுகின்றனர். 
இணைய தளப் பாதுகாப்பு சார்ந்து செயல்படும் செமாண்டெக் போன்ற நிறுவனங்கள், பிரச்னைக்குரிய புரோகிராம்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பதியப்படுகின்றனவா எனக் கண்காணித்து வந்தாலும், தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இத்தளத்தில் புரோகிராம்கள் பதியப்படுவதால், இவற்றின் கண்காணிப்பையும் மீறி இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு வருவதாக, செமாண்டெக் அறிவித்துள்ளது. 
இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், பதியப்படும் புரோகிராம்களைக் கண்காணிப்பதில் கூடுதல் கவனம் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த பதிப்பு 4.3ல், இத்தகைய மால்வேர் புரோகிராம்களைக் கண்காணித்துத் தடுக்கும் தொழில் நுட்பம் இணைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. எனவே, டவுண்லோட் செய்தாலும், இன்ஸ்டால் செய்யப் படுகையில், இந்த வகை மால்வேர் புரோகிராம்களை புதிய ஆண்ட்ராட்ய்ட் சிஸ்டம் தடுத்துவிடும்.
 
Back to top!